எம் மகன் ( திரைவிமர்சனம் )
கோபத்தையும் பாசத்தையும் அடித்தே வெளிப்படுத்தும் அப்பாவாக நாஸர். அப்பாவால் ஏற்படும் அவமானத்தை சகித்தே பழகிய மகனாக பரத். அப்பாவால் ஏற்படும் வேதனைகளுக்கு வடிகாலாக பரத்துக்கு இருப்பது, பத்து வருடங்களாக அவர் பார்த்தேயிராத மாமன் மகள் கோபிகா. இவர்கள் காதல் பரத்தை வீட்டை விட்டு துரத்துகிறது. இறுதியில் அப்பாவும் மகனும் எப்படி இணைந்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்.
நேட்டிவிட்டி மணம் கமழும் கதைக் களத்துக்காகவும், தனி காமெடி ட்ராக், அரைகுறை ஆடையில் குத்து டான்ஸ் இல்லாததற்காகவும் இயக்குனர் திருமுருகனுக்கு ஒரு சபாஷ்.
படம் விட்டு வரும்போது பார்வையாளர்கள் மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருப்பவர் நாஸர். மகளை தவிர அனைவரையும் அடித்து நொறுக்கும் கண்டிப்பான மளிகைக் கடை ஓனர் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். முதல் நாள் இரவு கடைபணத்தில் ஐநூறு ரூபாய் குறைந்ததற்காக மகன் பரத்தை அடித்து துவையலாக்குகிறார் நாஸர்.பணத்தை எடுத்தது பரத் அல்ல வடிவேலு என்பது மறுநாள் தெரிய வந்ததும், பாசத்தைக் காட்ட கறிசோறு பரிமாறுவதும், பரத்துக்கு பிடிக்காத ஈரலை சாப்பிடச் சொல்லி வற்புறுத்த அவர் மறுக்க, இறுதியில் முதல் நாளைவிட அதிகமாக அவரை அடித்து நொறுக்குவதும் நாஸர் கதாபாத்திரத்தை விளக்கும் அழுத்தமான காட்சிகள். கோயிலில் அங்கபிரதட்சணம் செய்து சோர்ந்து போய் இருக்கும் மனைவியிடம்,"அதுதான் துண்லயும் துரும்புலயும் இருக்கிறதா சொல்றாங்களே, வீட்ல உள்ள ஏதாவது தூணை கும்பிட வேண்டியதுதானே " என பிரக்டிக்கலாக பேசும் நாஸர் கேரக்டரை படத்தின் இறுதியில் பால்குடம் தூக்க வைத்து டம்மியாக்கியிருப்பது சோகம்.
படத்துக்குப் படம் பரத்தின் திறமை பளிச்சிடுகிறது. வேதனையை தனது அமுல் பேபி முகத்தில் அவர் வெளிப்படுத்தும் விதமும் வசதி வந்த பிறகு அப்பாவின் பிளஸ்களை அப்பாவிடமே ஒரு குமுறலுடன் பேசும் போதும் அட போட வைக்கிறார்.சிரித்து முடிக்கும் முன்பே கதறி அழும் கதாபாத்திரம் கோபிகாவுக்கு. காஜாலா... சுருக்கமாக கறிவேப்பிலை! பரத்தின் அம்மாவாக வரும் சரண்யா, தங்கையாக வரும் ரம்யா, தாய்மாமன்களில் ஒருவரான சண்முகராஜன் என அனைவரும் பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள்.
குடும்பப் பெரியவரின் இறப்பை குடும்பமே ஆர்வமுடன் எதிர்ப்பார்க்கும் காட்சி புதுசு. அதையே ஜவ்வாக இழுக்கும் போது சலிப்பு தட்டுகிறது. பரத்தின் தாய்மாமனாக படம் தொய்வடையும் போதெல்லாம் தோள் கொடுத்திருக்கிறார் வடிவேலு. காமெடி கலந்த கேரக்டர் ரோலில் இன்னொரு ஹீரோவாக ஜொலிக்கிறார் மனிதர்.
இடைவேளைவரை எதிர்பார்ப்பை தூண்டியபடி செல்லும் படம் அதன் பிறகு அதலபாதளத்துக்கு செல்கிறது. ஒரே பாடலில் கோழிபண்ணையில் வேலை செய்யும் பரத் கார் பங்களா என செட்டிலாவதும், கண்டிப்பான நாசர் திடீரென கனிவான மனிதராக மாறுவதும் நாடகத்தனம்.
கிராமியத்தை தாண்டாத வித்யாசாகரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் குற்றாலச் சாரல். நேட்டிவிட்டிக்கு ஏற்ப பாடல்களில் தமிழ் விளையாடுவது எதிர்பாராத இனிமை.
படத்தின் சிறப்புகளில் ஒன்று ஒளிப்பதிவு. யதார்த்தமான கதைக்கேற்ப இயற்கை ஒளியில் எடுத்தது போன்ற ஒளி அமைப்பு படத்தை நெருக்கமாக உணர வைக்கிறது. திரைக்கதையை சிதைக்காத எடிட்டிங் இன்னொரு பிளஸ். கோபக்கார வீட்டு ஆண்களால் குடும்பப் பெண்களின் உலகம் எப்படி நசுக்கப்படுகிறது என்பதை மென் சோகமாக காட்டியிருக்கிறார்கள். அனைத்தும் வசனத்தில் என்பதுதான் சலிக்க வைக்கிறது. வசனம் பாஸ்கர் சக்தி.
வாவ் என்று சொல்ல வேண்டிய பின் பகுதியை ஆவ் என கொட்டாவி விட வைத்ததை தவிர்த்துப் பார்த்தால் எம் மகன் - 'ஜம்'மகன்.