பேரரசு
நீதிபதியை (நாசர்) கடத்தி கொலை செய்யும் கும்பலை கண்டுபிடுக்க சிறப்பு சி.பி.ஐ. அதிகாரியாக நியமிக்கப்படுபவர் விஜயகாந்த். விஜயகாந்தின் தேடல் படலத்தில் அமைச்சர் பிரகாஷ்ராஜின் கைத்தடிகளாக செயல்படும் மூன்று போலீஸ் அதிகாரிகள்தான் கொலையாளிகள் என்பது தெரியவருகிறது.
அவர்களை கைது செய்ய சரியான தருணம் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் யாரோ ஒருவரால் அந்த அதிகாரிகள் வரிசையாக கொல்லப்படுகிறார்கள்.
போலீஸும் சி.பி.ஐ.யும் அந்த மர்ம மனிதன் யார் என்று தெரியாமல் மண்டை காயும் நேரத்தில் அந்த கொலைகளை செய்வது விஜயகாந்த் போல் இருக்கும் இன்னொரு விஜயகாந்த்தான் என்று தெரியவர, திக் திக் திருப்பம் ஆரம்பமாகிறது.
அவன் யாரென்ற விசாரணையை முடுக்கும் சி.பி.ஐ. விஜயகாந்திற்கு அது தனது தம்பிதான் என்று உண்மையும், ப்ளாஷ் பேக்கும் தெரியவருகிறது.
அமைச்சரை தீர்த்துக்கட்ட தம்பி விஜயகாந்த் திட்டம்போட அதனை தடுக்க வியூகம் அமைக்கிறார் சி.பி.ஐ. விஜயகாந்த். விஜயகாந்த் Vs விஜயகாந்த் போட்டியில் வெற்றி யாருக்கு என்பது க்ளைமாக்ஸ்.
இந்த படத்தில் விஜயகாந்திற்கு வசனம் எழுதிய இயக்குனர், பேனாவால் எழுதினாரா சைலண்சரால் எழுதினாரா என்று யோசிக்கும் அளவிற்கு ரொம்பவே அடக்கி வாசித்திருக்கிறார் விஜயகாந்த். அதற்காக பாராட்டுக்கள்.
சந்தர்ப்பம் கிடைத்த நேரங்களில் அரசியல் விளம்பரமும் தேடிக்கொள்ள முயன்றிருக்கும் கேப்டன், வழக்கம்போலவே தனது ரசிகர்களுக்கு ஆக்ஷ்ன் விருந்தும் படைக்கிறார்.
அமைச்சர் இலக்கியனாக பிரகாஷ்ராஜ் பிரமாதம். கொலைசெய்யப்பட்ட போலீஸ் அதிகாரியின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க செல்லும்போது மேள சத்தம் கேட்டு ஆட துடிப்பதும் நாசர் குரலில் மிமிக்ரி செய்து நடித்து காட்டுவதுமாக முகம் காட்டும் இடங்களிலெல்லாம் ஸ்கோர் செய்கிறார்.
இன்ஸ்பெக்டராக வரும் ஆனந்த்ராஜ் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பது ஆச்சரியம் என்றால் நடிப்பில் பக்குவமும் சேர்ந்திருப்பது அதைவிட ஆச்சரியம்.
கான்ஸ்டபிள் கந்தசாமியாக பாண்டியராஜன் ஆங்காங்கே காமெடியை குதறி எடுத்திருக்கிறார்.
படத்தில் நாயகி வேண்டும் என்று யார் அழுதது. கதைக்கு சம்பந்தமில்லாத திணிப்பு சலிப்பு என்றால், க்ளைமாக்ஸில் விஜயகாந்துடன் கல்யாணம் ஆவதுபோல் காட்டுது செம கூத்து.
பிரவின்மணியின் இசையில் பாடல்கள் மூன்றும் புஸ்.... பின்னணி இசையில் பாஸ்.
படத்தின் விறுவிறுப்புக்கும் சஸ்பென்சுக்கும் இயக்குனர் உதயனின் புத்தி வெகுவாக உதவியிருக்கிறது. கொலை, கண்டுபிடிப்பு, அண்ணன் - தம்பி - ஆள்மாறாட்டம் - என பார்த்து சலித்த கதை என்பதால் 'பேரரசு'வை பெரிதாக பாராட்ட தோன்றவில்லை.