ஜாம்பவான்
கமல் நடித்த 'எனக்குள் ஒருவன்' டைப் கதைதான் சலவை செய்யப்பட்டு ஜாம்பவானாக உருவாகியுள்ளது.
விஜயகுமாரின் மகனாக கிராமத்து காளையாக துள்ளித்திரியும் பிரஷாந்த் அப்பாவுக்கு எதிராக சதி வேலை செய்யும் வில்லன் மோகன் நடராஜனுடன் மோதுகிறார்.
வில்லனின் கூலிப்படைகளுடன் மல்லுக்கு நிற்கும்போது அவர்களை எங்கேயோ பார்த்த ஞாபகம் பிரஷாந்தின் மூளையில் அரைகுறையாக ப்ளாஷ் அடிக்கிறது. சம்பந்தமில்லாத காட்சிகள் கண்முன் வந்தபோவது ஏன் என்று நாயகன் குழப்பமடைய, ஒரு கட்டத்தில் தான் விஜயகுமாரின் மகனே அல்ல என்பது தெரிய வரும்போது ப்ளாஷ் பேக் ஆரம்பமாகிறது.
ப்ளாஷ் பேக் கதையில், பட்டணத்தில் வாழும் சங்கீத குடும்பத்தில் பிறந்த பிரஷாந்த், ஐ.பி.எஸ். ஆகும் லட்சியம் உள்ளவர். தேர்விற்காக டெல்லி செல்லும் நேரத்தில் வில்லன்கள் ரூபத்தில் வீட்டுக்குள் நுழைகிறது விதி.
பிரஷாந்த் வீட்டில் தாதா பெப்ஸிவிஜயன் செய்யும் கொலைக்கு சாட்சி சொல்கிறார் நாயகனின் தந்தை. (இசை மேதை டி.என். சேஷ கோபாலன்) இதனால் பெப்ஸிவிஜயனின் கோபத்திற்கு ஆளாகும் பிரஷாந்த் குடும்பத்தினர் கூண்டோடு அழிக்கப்படுகிறார்கள்.
பாசம் மிகுந்த அப்பா - அம்மா - தங்கைகளை பரலோகம் அனுப்பிய வில்லன் ஆட்களை பழிவாங்க புறப்படும் பிரஷாந்த் தலையில் அடிப்பட்டு பழைய சம்பவங்களை மறந்து விஜயகுமாரின் மகனாக கிராமத்திற்கு வருகிறார்.
ப்ளாஷ் பேக் ஞாபகத்திற்கு வந்ததும் வில்லன் ஆட்களை பழிவாங்க மீண்டும் புறப்படும் பிரஷாந்த் 'ஜாம்பவனாக' சாதிப்பது என்ன என்பது மீதி கதை.
படத்தின் ஆ'ரம்ப' காட்சிகள் பார்த்து சலித்த பழைய படங்களின் சாயல் என்றாலும் இரண்டாம் பாதி கதை ஆக்ஷ்ன் டிராக்கிற்கு மாறும்போது விறுவிறுப்படைகிறது திரைக்கதை.
பிரஷாந்தால் எந்த கேரக்டரையும் செய்ய முடியும் என்பதை ஏற்கனவே நிரூபித்திருந்தாலும் கதை தேர்வு விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவதால் சமீபகாலமாக ஒரு எல்லைக்குள்ளேயே நின்றுவிடுகிறது பிரஷாந்தின் எதிர்காலம்.
ஒரே நேரத்தில் 50 பேரை அடித்தாலும் நம்பும்படியான உடல்வாகும், எல்லாவித நடனங்களை ஆடும் திறமையும் இருந்தும் படத்திற்கு படம் பிரஷாந்த் சோபிக்க முடியாமல் போவது சோகமே.
'பூவே பூச்சூடவா' நதியா ஸ்டைலில் ஆடை இல்லாமல் காட்டும் கண்ணாடி அணிந்துள்ளதாக பிரஷாந்தை வம்பிழுக்கும் 'பொறுப்பான' கேரக்டர் நிலாவுக்கு. மற்றபடி நிலாவின் நடிப்பில் அமாவாசைதான்.
சிட்டி பார்ட் கதையில் நாயகனுடன் கிளாமர் ஆட்டம் போடும் மேக்னா நாயுடு, வில்லனின் துப்பாக்கி குண்டிற்கு இரையாகும்போது அவரது கதாபாத்திரம் அய்யோ பரிதாபம்.
விவேக்கின் காமெடியில் மருந்துக்கும் நகைச்சுவை இல்லாததுதான் காமெடி.
பரத்வாஜ் இசையில் 'அல்வா பொண்ணு' குத்தாட்ட ரசிகர்களை குஷிப்படுத்தும் மெட்டு.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் நந்தகுமார் என்று சொன்னால், சரி அதற்கு என்ன இப்போ? என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்.
'ஜாம்பவான்' சலிப்பூட்டுகிறான்.